இரண்டு வாரங்களுக்கு முடங்கும் வடக்கின் ஒரு பிரதேசம்!
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா நகரினை முடக்குவதற்கு தாம் பரிந்துரை செய்துள்ளதாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் கொவிட்19 அவசர கால நிலமைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் தலைமையில் இன்றைய தினம் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது. குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வவுனியா பிரதேசசெயலாளர் பிரிவில் 19 கிராம சேவகர் பிரிவுகளில் முழுமையான முடக்கத்தினை முன்னெடுக்குமாறு அரச அதிபருக்கு பரிந்துரை செய்துள்ளோம். அந்த வகையில் எ9 வீதியில் நொச்சிமோட்டை பாலம், மற்றும் இரட்டை பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நகர சபையின் வரவேற்பு வளைவு, மன்னார் வீதியில் நெளுக்குளம் பொலிஸ் நிலையம், பூந்தோட்டம் சந்தி, மாமடு சந்தி ஆகிய பகுதிகள் பொலிசாரால் முடக்கப்படும்.
குறித்த பகுதிகளால் வவுனியா நகருக்கு உள்ளேவரும் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்படும். இன்றிலிருந்து இரண்டு கிழமைகளிற்கு இந்த நடைமுறை நீடிக்கும். அவசர தேவைகள், அத்தியவசிய தேவைகள், அரச ஊழியர்கள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.
அத்துடன் வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதரும் பேருந்துகள், முடக்கப்பகுதிக்குள் நிறுத்தாமல் செல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரைகளை நாம் அனுப்பியுள்ளோம். ஏனைய நடவடிக்கைகளை அரச அதிபர் முன்னெடுப்பார் என்று தெரிவித்தார்.