Cylinder வெடிப்பு விபத்தில் சிக்கிய பெண் இரு வாரங்களுக்குப் பின் மரணம்!!
சமையல் எரிவாயு விபத்து காரணமாக தீக்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மாத்தளை உடுபிஹில்ல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 19 ஆம் திகதி சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைக்க முயற்சித்த போது உடலில் தீப்பிடித்துள்ளது. கடும் தீக்காயங்களுக்கு உள்ளான பெண், மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவருக்கு இரண்டு வாரங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து இரண்டு தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய பெண் உடல் நிலை பாதிப்புடனேயே இருந்து வந்துள்ளார்.
இதன் காரணமாக மருத்துவப் பரிசோதனைக்காக பெண்ணை நேற்று மீண்டும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பரிசோதனையில் அவரது உடலில் சக்கரையின் வீதம் குறைந்து உடல் நிலைப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் மரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
மாத்தளை உடுபிஹில்ல பிரதேசத்தை சேர்ந்த 69 வயதான எச்.எம்.சந்திரா குமார என்ற பெண்ணே தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த மரண சம்பவம் குறித்து சமையல் எரிவாயு நிறுவனம் மற்றும் நுகர்வோர் அதிகார சபை ஆகியவற்றுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.