எமது பிரச்சனைக்கு கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் வருடம் முதல் நாட்டின் சகல மக்களும் பட்டினியால் மரணிக்க வேண்டி ஏற்படும்…. போரட்டத்தில் விவசாயிகள்!!

இலங்கையில் உரம் உள்ளடங்கலாக தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்திய தமிழர் தாயகப் பகுதிகளில் நேற்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள், நாட்டு மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலைமைக்கு அரசாங்கம் வித்திட்டுவருவதாக எச்சரித்துள்ளனர்.

ஒரே இரவில் இரசாயன உரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்பதை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்வார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குறிப்பிட்டனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் நாள் வடக்கில் போராட்டம் நடத்தப்பட்டிருந்த நேற்று, இன்று தமிழ் தாயகமான வடக்கு கிழக்கில் விவசாயிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

 

விவசாயிகளின் உரப் பிரச்சினைக்கு தீர்வாக 30 ஆயிரம் மெட்ரிக் தொன் இராசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், அவை இதுவரை விவசாயிகளை உரிய முறையில் சென்றடையாத நிலையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில், வடக்கின் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும், கிழக்கின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலும் உள்ள சகல கமநல சேவை நிலையங்களுக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

திருகோணமலையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், வீதியை மறித்து, விவசாயிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டதால் சிறிது நேரம் பதட்டமான நிலைமை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் விவசாயிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டுள்ளனர்.

உரத் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளால் தற்போது, விவசாயிகள் மாத்திரமே நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்,தீர்வு கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் வருடம் முதல் நாட்டின் சகல மக்களும் பட்டினியால் மரணிக்க வேண்டி ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *