indiaLatestNewsWorld

அமெரிக்க உளவுத்துறை(CIA)யின் தலைவர்…. இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் ஸ்ரீலங்கா விவகாரம் குறித்து நீண்டநேர கலந்துரையாடல்!!

இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு முக்கிய விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்க உளவுத்துறையாகிய சி.ஐ.ஏயின் தலைவர் வில்லியம் பேர்ன்ஸ் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் ஸ்ரீலங்கா விவகாரம் குறித்து நீண்டநேரம் கலந்துரையாடியுள்ளார்.

குறிப்பாக ஸ்ரீலங்காவில் சீனா மேற்கொண்டு வரும் முதலீடுகள், மற்றும் சீனப்பாதுகாப்புப் பிரிவு உயரதிகாரிகளின் கொழும்பு வருகை உள்ளிட்ட பல விடயங்கள் இதில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவிற்கு அவசர பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க பிரபல உளவுப்பிரிவான சி.ஐ.ஏயின் தலைவர் வில்லியம் பேர்ன்ஸ் இந்திய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் டோவலுடன் நேற்று முன்தினம் விசேட சந்திப்பை நடத்தியுள்ளார்.

தலைநகர் டில்லியில் நடந்த இந்த சந்திப்பின்போது அயல்நாட்டுப் பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் பேசப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக ஸ்ரீலங்கா சார்ந்த விடயங்களும் இதில் ஆராயப்பட்டுள்ளன. அதன்படி ஸ்ரீலங்காவில் இடம்பெறுகின்ற சீன முதலீடுகள், சீன இராணுவத்தினர் ஸ்ரீலங்காவில் திட்டப்பணிகளுக்காக வருகைதந்தமை, இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் சீனாவின் முதலீட்டு முயற்சிகள் என்பவற்றால் இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கும் தாக்கம், பிராந்தியத்தில் சீனாவின் செயற்பாட்டினால் இந்தியாவுக்கும் பலருக்கும் ஏற்பட்டிருக்கின்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே இந்தியாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் ஸ்ரீலங்காவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றது. இதுகுறித்த மேலதிக தகவல்கள் எதனையும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும், ஸ்ரீலங்கா இராணுவமும் இதுவரை வெளியிடவில்லை.

இதேவேளை, ஆப்கானிஸ்தானை கைப்பற்றியிருக்கும் தலிபான்கள் விடயம் பற்றியும் அஜித் டோவலுடன் நடத்திய சந்திப்பில் அமெரிக்க உளவுப் பிரிவு தலைவர் கேட்டறிந்துகொண்டுள்ளார்.

முன்னதாக ரஷ்ய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நிகோலய் பத்ருஷேவை அண்மையில் அஜித் டோவல் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பின்போது ஆப்கானின் அரசியல் சூழ்நிலைகள், சீனா மற்றும் பாகிஸ்தான் விடயங்கள் பற்றியும் ஆராயப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *