வீடு ஒன்றுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் மீட்பு!!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெலேகால, லோவர் கிப்ஸன் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் ஒன்று, இன்று (01) மதியம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி லுசாகாகுமாரி தர்மகீர்த்தியின் உத்தரவுக்கு அமைய, நுவரெலியா பொலிஸாரால் நீதிபதி முன்னிலையில் சிசுவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

ஆறுமாதம் குறை பிரசுவத்தில் பிறந்த சிசுவே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கெலேகால, லோவர் கிப்ஸன் வீதியில் தனிவீடு ஒன்றில் குடும்பத்துடன் வசித்த 25 வயதுடைய திருமணம் முடிக்காத யுவதி நான்கு மாத கர்பிணியாகியுள்ளார்.

இவ்விடயம் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து வீட்டாரின் நிர்ப்பந்தத்தில் கருக்கலைப்பு மருந்தை உட்கொண்ட யுவதி வீட்டிலேயே குறை மாதத்தில் சிசுவை பிரசவித்துள்ளார். இவ்வாறு பிரசவித்த குழந்தையை வீட்டுக்கு அருகில் உள்ள மின்கம்பம் ஒன்றுக்கு அருகில் புதைத்துள்ளனர்.

அதேநேரத்தில் சிசுவை பிரசவித்த தாய்க்கு இரத்த போக்கு அதிகரித்து பாதிக்கப்பட்ட நிலையில் அவரை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்ட யுவதியிடம் வைத்தியர்கள் வினவியபோது, தான் குறைமாதத்தில் சிசு ஒன்றை பிரசவித்து சிசு இறந்த நிலையில் அதை வீட்டார் புதைத்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வைத்தியர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை பொலிஸாருக்கு (31) மாலை முறையிட்டுள்ளனர். அதேநேரத்தில் யுவதியிடம் விசாரணைகளை மேற்கொண்ட வைத்தியசாலை பொலிஸார் யுவதியின் வாக்குமூலத்தை பெற்று இது விடயமாக நுவரெலியா நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர். இதையடுத்து, இன்று (01) மதியம் சிசு புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் கண்டு இரத்த கறையுடன் துணி ஒன்றில் சுற்றி புதைக்கப்பட்ட நிலையில் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

இதையடுத்து சடலம் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நீதவான் பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார். இதன்போது, வீட்டாரிடம் விசாரணையை முன்னெடுத்த நீதவான் லுசிக்கா குபாரி தர்மகீர்த்தி குழந்தையை பிரசவித்த தாய்க்கு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.

மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நுவரெலியா பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *