ஊரடங்கு சட்டம் நீக்குவது தொடர்பில் தகவல்!!
நாட்டை முடக்குவதன் மூலம் மட்டும் கொரோனா தொற்றுநோயை சமாளிக்க முடியாது, மக்களின் ஒத்துழைப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது முக்கியமானது என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.
இதேவேளை, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டாலும் பயணக் கட்டுப்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், “நாட்டை முடக்குவதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. வைரஸ் பரப்புவதைக் கட்டுப்படுத்தும் ஒரு வழியாகவே ஊரடங்கு உதவும்.
மக்கள் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் நாட்டை முடக்குவது அர்த்தமற்றது. நாடு முடக்கப்பட்ட போதிலும் வீதியில் எத்தனை வாகனங்கள் உள்ளன என்பதை நீங்கள் பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கட்டுப்பாட்டை நீக்கிய பிறகு, போக்குவரத்து, வணிக நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் எனக் கூறினார்.
“தற்போதைய முடக்கல் நிலையை நீக்கிய பின் கண்டிப்பாக பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது மற்றும் தனிப்பட்ட பயணங்கள் வைபவங்களை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.
போக்குவரத்து, வர்த்தக மையங்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் திரள்வதைத் தடுக்க முன்கூட்டியே திட்டங்களை வகுக்க வேண்டும்.
அத்தகைய திட்டங்கள் இல்லாமல், மக்களையோ சுகாதாரத் துறையையோ குற்றம் சொல்ல வேண்டாம் என்றும் வைத்தியர் குறிப்பிட்டார்.