கடன் அடிப்படையில் எரிபொருள் கொள்வனவு – அரசாங்கம் தீவிர முயற்சி!!
ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளிடமிருந்து மசகு எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்களை நீண்ட கால கடன் அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
குறித்த நாடுகளின் ஸ்ரீலங்காவிற்கான இராஜதந்திரிகளை சந்தித்து, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இது குறித்து பேச்சு நடத்தியுள்ளார்.
ஸ்ரீலங்காவில் உள்ள ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்தின் பதில் தலைவர் சயீப் அலனோபியை எரிசக்தி அமைச்சில் வைத்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நாடு எதிர்கொள்ளும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக நீண்ட கால கடன் அடிப்படையில் இலங்கைக்கு மசகு எண்ணெய் மற்றும் பெற்றோலியம் சார்ந்த பொருட்களை பெற்றுக்கொள்வது குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் எரிசக்தி அமைச்சின் செயலாளர், சுமித் விஜேசிங்க மற்றும் துணை பொது முகாமையாளர் மகேந்திர கருசிங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, ஸ்ரீலங்காவிற்கான ஈரானிய தூதுவர் ஹாஷேம் அஷ்ஜஸாதேவையும் அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நீண்டகால கடன் வசதியில் மசகு எண்ணெய் மற்றும் பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்வது குறித்த தீர்மானம் நாட்டின் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு ஒரு தீர்வாக அமையும் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்புகள் குறித்து ஸ்ரீலங்கா எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.