சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து உள்ளூர் மீனவர்கள் போராட்டம்!!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனமும், மாதகல் பிரதேச கடற்தொழிலாளர்களும் இணைந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

2500 இந்திய இழுவைமடி தொழிலை நிறுத்தும் வரை போராடுவோம், இந்திய அரசு வடக்கு மீனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க கோருகிறோம். எமது கடல் வளத்தையும் வாழ்வாதாரத்தையும், பாதுகாக்க இலங்கை அரசை வலியுறுத்துவோம் போன்ற கோஷங்களை முன் வைத்தே போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டமையால் , அவ்வீதி வழியான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டு இருந்த நிலையில், காவல்துறையினர், போராட்டகார்களை வீதியோரமாக நின்று போராடுமாறு பணித்துள்ளனர்

அதன் போது கடலில் அயல் நாட்டவர்களின் அத்துமீறல்களைத் தடுக்க முடியவில்லை, சொந்தநாட்டு மக்களை அடக்க முயல்கிறீர்களா?  எங்களுடன் கடலுக்கு வாருங்கள் , அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை காண்பிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் முடிந்தால் அவர்களை கைது செய்யுங்கள்  என கோரி காவல்துறையினரின் பணிப்பை புறம் தள்ளி வீதியில் அமர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் குறித்த போராட்டத்தை முன்னெடுத்த பின்னர், உதவி பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றினை கையளித்ததோடு, தமது போராட்டத்தினையும் முடிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *