கொழும்பில் வேகமாக பரவும் கொரோனா -வெளியானது காரணம்

கொழும்பில் அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பதற்கான காரணம் தெரியவந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

கொழும்பு வடக்கு பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்புக்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள், தமது வீடுகளில் மலசலகூடங்கள் உள்ள போதிலும், பொது மலசலகூடங்களை பயன்படுத்தியமையினாலேயே, கொழும்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் இரண்டாவது அலை காரணமாக 15,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 12,702 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியினால் பாதிக்கப்பட்டவர்கள் என கொவிட்-19 தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.

இவ்வாறு பேலியகொட கொவிட் கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு வடக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு வடக்கு பகுதியில், முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, கரையோர பொலிஸ் பிரிவுகளிலுள்ளவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு வடக்கில் மாத்திரம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 200 பேர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மட்டக்குளி பகுதியில் 388 கொவிட் தொற்றாளர்களும், முகத்துவாரம் பகுதியில் 327 கொவிட் தொற்றாளர்களும், தெமட்டகொட பகுதியில் 288 கொவிட் தொற்றாளர்களும், வனாத்தமுல்ல பகுதியில் 204 கொவிட் தொற்றாளர்களும், கொம்பனிவீதியில் 230 கொவிட் தொற்றாளர்களும், ஜிந்துபிட்டி பகுதியில் 255 கொவிட் தொற்றாளர்களும், கொட்டாஞ்சேனை பகுதியில் 295 கொவிட் தொற்றாளர்களும், புளுமெண்டல் பகுதியில் 205 கொவிட் தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர் என அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *