கொழும்பு கடலில் தீப்பற்றி எரிந்த கப்பலால் ஏற்பட்டுள்ள ஆபத்து – மக்களுக்கு முக்கிய அறிவித்தல் !!

எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவல் காரணமாக மீன்வளத்துறைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் காணப்படுவதாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரத்னராஜா தெரிவித்துள்ளார்.

தீவிபத்திற்குள்ளாகியுள்ள குறித்த கப்பல் வெடித்து சிதறும் அபாயத்தில் உள்ளமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் பேசிய அவர்,

கொழும்பு துறைமுகத்தின் வட மேல் திசையில் 9.5 கடற்பரப்பில் தீப்பற்றி எரியும் கப்பலின் கழிவுகள் மற்றும் வெடித்து சிதறிய கொள்கலன்கள் நீர்க் கொழும்பு கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளன.

கப்பலில் இருந்து வெளியேறிய எரிபொருட்கள் கடலில் கலந்துள்ளமையினால் ஏற்படகூடிய அபாயம் மற்றும் கடலுணவுகளை உட்கொள்வதினால் ஏற்படும் பாதிப்பு குறித்து தற்போது வரை கிடைக்கப் பெற்றுள்ள சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பரிசோதனைளை முன்னெடுத்துள்ளோம்.

கப்பலில் இருந்து வெளியாகியுள்ள பிளாஸ்டிக் உற்பத்தி மூலப் பொருட்கள் பெருமளவில் நீர்கொழும்பு பிரதேசத்தின் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளன. இம்மூலப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த பிளாஸ்டிக் மூலப் பொருட்களை மீன்கள் உண்பதால் அவை இறக்க நேரிடும். இக்கடற்பரப்பில் மீன்கள் இறந்து மிதக்கின்றனவா என்பது குறித்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போதைய நிலைமைக்கு அமைய சமுத்திரத்திற்கும், கடற் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்ய முடியாது. இருப்பினும் மீன்வளத்துறைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது.

கப்பலில் இருந்து வெளியாகிய பொருட்களை பொது மக்கள் எடுத்து சென்றுள்ளார்கள். இந்த மூலப் பொருட்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அவர்களுக்கு உரிய தெளிவு உள்ளதா என்பது சந்தேகத்திற்குரியது. ஆகவே கடலில் மிதந்து வரும் பொருட்களை தொடுவதை பொது மக்கள் முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *