பிற்பகல் 2 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது….. தாமரை கோபுரம்!!
தெற்காசியாவின் மிகவும் உயரமான கோபுரமான தாமரை கோபுரம் இன்று(15/09/2022) பிற்பகல் 2 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 28ம் திகதி நிறைவடைந்திருந்தன.
113 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 300 மீற்றர் உயரத்தில் இந்த தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக சீன நிறுவனம் 88.65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதுடன் மிகுதியை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது.
இன்று(15/09/2022) திறக்கப்பட்ட இந்த கோபுரத்தை நாளாந்தம் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பொது மக்கள் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோபுரத்தை பார்வையிடுவதற்கு 500 ரூபா நுழைவுச்சீட்டு கட்டணம் அறவிடப்படவுள்ளதுடன்,
10 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு 200 ரூபா அறவிடப்படவுள்ளதாக கொழும்பு தாமரை கோபுரம் தனியார் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்,
வார இறுதி நாட்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அதேவேளை,
பாடசாலைகளின் கோரிக்கைக்கு அமைய மாணவர்களுக்கு கோபுரத்தை பார்வையிட முடியும் எனவும் மாணவர்களுக்கு 200 ரூபா நுழைவு கட்டணத்தை அறவிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தாமரை கோபுரத்தை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,
தாமரைக் கோபுரத்தினை பார்வையிட செல்வதற்கான நுழைவுச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சீன மொழி இணைக்கப்பட்டிருப்பதாக பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என சிறிலங்காவிற்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.
அத்துடன்,
குறித்த அனுமதி சீட்டை சமூகவலைத்தளங்கள் ஊடாக பகிர்ந்து இலவச விளம்பரத்தை வழங்கியமைக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் சிறிலங்காவிற்கான சீன தூதரகத்தின் டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.