சிறுகோளில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரியுடன் 6 ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு திரும்பிய ஜப்பான் விண்கலம்

சிறுகோளில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரியுடன் 6 ஆண்டுகளுக்கு பின் ‘ஹயபுஸா 2’ விண்கலம் ஆஸ்திரேலியாவின் ஊமேரா பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

பூமியில் இருந்து, 30 கோடி, கி.மீ., தொலைவில் உள்ள, ‘ரியுகு’ என்ற சிறுகோளை ஆய்வு செய்ய ஜப்பான் கடந்த 2014-ம் ஆண்டு, ‘ஹயபுஸா 2’ என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது. நீண்ட பயணத்துக்கு பிறகு அந்த சிறுகோளில் வெற்றிகரமாக தரையிறங்கிய ஜப்பான் விண்கலம் அங்குள்ள மண் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டது.

இதையடுத்து அந்த விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பூமிக்கு புறப்பட்டது. விண்கலத்தில் இருந்து விடுவிக்கப்படும் மண்மாதிரிகள் அடங்கிய ‘கேப்சூல்’ ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஊமேரா நகரில் டிசம்பர் 6-ந் தேதி தரையிறங்கும் என ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்திருந்தது. எனவே ரேடார் கருவிகளின் உதவியோடு விண்கலத்தின் பயணத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் உன்னிப்பாக கவனித்து வந்தனர். இந்தநிலையில் ஏற்கனவே கணித்தபடி ‘ஹயபுஸா 2’ விண்கலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ‘கேப்சூல்’ ஆஸ்திரேலியாவின் ஊமேரா பகுதியில் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. அதனைத் தொடர்ந்து ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஹெலிகாப்டர் மூலம் அந்த ‘கேப்சுல்’ ஐ தேடினர்.

2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு அந்த ‘கேப்சுல்’ ஐ மீட்டனர். இது குறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜப்பான் விஞ்ஞானிகள் ஹயபுஸா 2 சுமந்து வந்துள்ள மண் மாதிரிகளை ஆராய்வதன் மூலம், சூரிய மண்டலத்தினுடைய தோற்றம், உயிரினங்களின் தோற்றம் குறித்த விடைதெறியாத பல்வேறு ரகசியக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் என கூறினர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *