நாட்டில் சில பகுதிகளுக்கு அவசர மண்சரிவு எச்சரிக்கை….. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்!!
நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையினை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் 100 மில்லி மீற்றரை தாண்டிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால் மண்சரிவு, பாறை சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
ஆபத்தான கட்டத்தில் தேவையேற்படின் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் இந்நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
அத்துடன்,
மண்சரிவுக்கான அறிகுறிகளான நிலம் மற்றும் சுவர்களில் விரிசல்கள் ஏற்படுதல், மரங்கள், வேலிகள் மற்றும் மின்கம்பங்கள் சாய்வது, திடீரென நீரூற்றுகள் தோன்றுவது, சேற்று நீர் வெளியேறுவது போன்றன தென்பட்டால் அவை தொடர்பில் கருத்தில் கொள்ளுமாறும் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.