அடுத்து ஆரம்பமாகியுள்ளது “குரங்கு தட்டம்மை” தாக்கம்!!
குரங்கு அம்மை தொற்று பரவத் தொடங்கியுள்ளமை உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் இன்னமும் முழுமையாக மீண்டு வராத நிலையில்,
கனடாவில் சிலருக்கும், அமெரிக்காவில் ஒருவருக்கும் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் ‘குரங்கு அம்மை’ தொற்று உறுதி செய்யப்பட்ட நபர், சமீபத்தில் கனடாவில் இருந்து வந்துள்ளாா் எனக் கூறப்படுகிறது.
அந்த நபரின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் குரங்கு அம்மை தொற்று பரவி வருவது குறித்து,
ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
காய்ச்சல், தசை வலி, முகம் மற்றும் உடலில் வீக்கம் ஆகியவையே இந்த நோய்க்கான முக்கிய அறிகுறிகளாக உள்ளது. இந்த தொற்று பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டுள்ளது.
குரங்கு அம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்திய பொருட்களை உபயோகிப்பதன் மூலம் தொற்று பரவ வாய்ப்புள்ளது.
காய்ச்சல் வந்த 3 நாட்களுக்குள் சருமத்தில் கொப்பளங்கள் ஏற்படுகின்றன. குறைந்தது 6 நாட்கள், அதிகபட்சமாக 21 நாட்கள் சிகிச்சை தேவைப்படுகிறது.
குரங்கு அம்மை பாதிப்புள்ளவா்கள் பயன்படுத்தும் பொருட்களைக் கிருமிநாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்வதன் மூலம் நோய் பரவுவதை கட்டுப்படுத்தலாம்.
இதனைத் தடுப்பதில் பெரியம்மை தடுப்பூசியே நல்ல பலன் அளிக்கிறது எனக் கூறப்படுகிறது.
அண்மையில் இங்கிலாந்து, போர்த்துக்கல், ஸ்பானியா ஆகிய நாடுகளிலும் குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ளதால், குறித்த நாடுகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.