இந்தியாவை தாக்கவுள்ள சூரிய வெப்பம்!!

இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலையின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து வரும் வெப்பக்காற்றின் தாக்கம் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, வடக்கு ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் வடமேற்கு மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

40 டிகிரி செல்சியஸிற்கும் அதிக வெப்பம் மற்றும் சாதாரண வெப்பநிலையில் இருந்து 4.5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் வெப்ப அலையின் தாக்கம் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

சாதாரண வெப்பநிலையில் இருந்து 6.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் வெப்ப அலையின் தாக்கம் மோசமாகக் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழமையாக ஜூன் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தலைநகர் புது டெல்லியில் வெப்ப அலையின் தாக்கம் இருக்கும் என்றாலும், இம்முறை காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய தலைவர் கூறியுள்ளார்.

இதனிடையே, கனடாவில் நிலவும் வரலாறு காணாத வெப்ப அலையின் தாக்கத்தினால் கடந்த ஐந்து நாட்களில் 486 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் மாத்திரம் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், வழமையாக பதிவாகும் உயிரிழப்புகளை விட இது 195 வீத அதிகரிப்பு என கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன், ஒரேகன் மாநிலங்களிலும் கடும் வெப்பத்தினால் பலர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *