இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை!
இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் வருகையை பஹ்ரைன் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அந் நாட்டு அரச செய்தி நிறுவனம் (BNA) தெரிவித்துள்ளது.
அதன்படி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் நுழைவை பஹ்ரைன் மே 24ஆம் திகதி முதல் நிறுத்தி வைத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.
பஹ்ரைன் குடிமக்கள் மற்றும் வதிவிட விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த இடை நிறுத்தத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு எதிர்மறையான பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை வழங்க வேண்டும் என்பதுடன் பஹ்ரைன் வந்தடைந்ததும் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.
இந்த முடிவு அரசாங்க செயற்குழு உத்தரவுகளுக்கு இணங்கவும், சிவில் விமானப் போக்குவரத்து விவகாரங்களான கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மருத்துவ பணிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது.
பஹ்ரைன் குடிமக்கள் மற்றும் வதிவிட விசா வைத்திருப்பவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக நடத்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனை சான்றிதழை வழங்க வேண்டும். வருகை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பத்தாம் நாளில் மற்றொரு பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
கூடுதலாக, குடிமக்கள் மற்றும் வதிவிட விசா வைத்திருப்பவர்கள் தங்கள் இல்லத்தில் அல்லது தேசிய சுகாதார ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற தனிமைப்படுத்தப்பட்ட வசதியில் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.