இலங்கைக்குள் நுழைய ‘யுவான் வாங் – 5’ கப்பலிற்கு அனுமதி வழங்கப்பட்ட்தா….. வெளிவந்த முழுமையான விபரங்கள்!!
சீன கப்பல் தமது துறைமுகத்திற்கு பிரவேசிப்பது தொடர்பில் இதுவரை எந்தவித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
யுவான் வாங் – 5 கப்பல் நாட்டிற்கு பிரவேசிப்பது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரி இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்,
ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் மூலமே அது தொடர்பில் தாம் அறிந்து கொண்டதாக குறிப்பிட்டார்.
நாட்டிற்கு கப்பல் ஒன்று பிரவேசிக்குமாயின் அதற்கான அனுமதி கோரப்பட்டிருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
சீனாவின் யுவான் வாங் – 5 கப்பலின் வருகையை பிற்போடுமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ள நிலையில்
அந்தக் கப்பல் இலங்கையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு வரவுள்ள குறித்த கப்பல்
இந்தோனேஷிய கடற்பரப்புக்கு அப்பால்
இலங்கைக்கு தென்மேற்காக 680 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருப்பதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கப்பல்,
இன்று(11/08/2022) முற்பகல் 9.30 க்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம்,
சீன தயாரிப்பிலான பாகிஸ்தான் போர்க் கப்பல் ஒன்றும் நாளை மறுதினம்(13/08/2022) இலங்கையை வந்தடையவுள்ளது.
‘யுவான் வாங்-5‘ என்ற சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆய்வுக் கப்பல்,
ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதற்கான இலங்கையின் அனுமதி
கடந்த மாதம் 12 ஆம் கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சால் வழங்கப்பட்டது.
11ஆம் திகதி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை முறைமுகத்தில் தரித்திருப்பதற்கும் முன்னதாக அனுமதி வழங்கப்பட்டது.
எனினும்,
பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளை சுட்டிக்காட்டிய இந்தியாவின் கடும் அதிருப்தியின் காரணமாக
இலங்கையின் வெளி விவகார அமைச்சு கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு அனுப்பி வைத்திருந்த செய்திக் குறிப்பில்
மேலும் ஆலோசனை செய்யப்படும் வரை யுவான் வாங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை ஒத்திவைக்குமாறு கோரியிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின்
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான தொடர்பு சுதந்திரமானதே தவிர
மூன்றாம் தரப்பினரை இலக்கு வைத்தது அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
தங்களது ஆய்வு கப்பல் இலங்கையில் நங்கூரமிடுதல் மூன்றாம் தரப்பை இலக்கு வைத்தது அல்ல என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் மேலும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை,
சீன தயாரிப்பிலான பாகிஸ்தான் போர்க் கப்பல் ஒன்று நாளை மறுதினம்(13/08/2022) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி வரை குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த கப்பல் பங்களாதேஷ் சிட்டகொங் துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருந்தது எனினும்
அந்த அனுமதியை டாக்கா அதிகாரிகள் நிராகரித்திருந்தனர்.
இந்தநிலையில்,
பாகிஸ்தான் நோக்கி பயணிக்கும் குறித்த கப்பல் இடைநடுவே கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.