வவுனியாவில் 15 வயது மாணவி உட்பட 7 பேருக்கு கொரோனா! மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட சில பாடசாலைகள்

வவுனியாவில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், சமூகத்தில் இருந்தும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் படி, புதிய சாளம்பைக்குளம் உப கொத்தணியில் இருந்து மூன்று பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

அதேபோன்று, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

திருகோணமலையை சேர்ந்த குறித்த நபருக்கு கடந்த 12ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது. வெளியிடப்பட்டுள்ள பரிசோதனைக்கான முடிவுகளின் படி அவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இவற்றைவிட வவுனியா கற்குழியை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி மற்றும் திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் எழுமாறாக அவர்களிடம் மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்களிற்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டமையால் பொதுமக்கள் மத்தியில் அச்சமான சூழல் நிலவிவருகின்றது.

இவற்றைவிட பம்பை மடு தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள தெற்கினை சேர்ந்த கர்ப்பினி பெண் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சமூகத்தில் இருந்து இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் வவுனியா தெற்கு வலயத்தை சேர்ந்த நான்கு பாடசாலைகளின் கல்விசெயற்பாடுகளை இடைநிறுத்துவதாக வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இறம்பைக்கும் மகளிர் மகா வித்தியாலம், தமிழ் மத்திய மகா வித்தியாலம், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் வித்தியாலம், காமினி மகாவித்தியாலம் ஆகியன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இதேவேளை கற்குழி மற்றும் திருநாவற்குளம் பகுதிகளில் தொற்று உறுதியானவர்களின் வீடுகளில் பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *