பலமுறை கத்தியால் குத்தப்பட்டு இதயப் பெருநாடி கிழிந்தவர் உயிர் காப்பாற்றப்பட்டது….. வவுனியாவில் சம்பவம் (படங்கள்)!!

வவுனியாவில் மிகவும் கொடூரமான முறையில் கத்திக்குத்துக்கிலக்கான இளைஞன் ஒருவர் வைத்தியர்களின் அதிதீவிர முயற்சியின் பயனாக காப்பாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்திக் குத்துக்கு இலக்காகி இதயப் பெருநாடி( Aorta) கிழிந்த நிலையில்,

01.02.22 அ‌ன்று இரவு 8 மணியளவில் ஓமந்தை பாலமோட்டை பகுதியில் 32 வயதுடைய இளைஞரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் உக்கிரமடைந்த நிலையில் இவருக்கு நெஞ்சிலும், வயிற்றிலும் மிக ஆழமாக பலமுறை குத்தப்பட்டுள்ளது.

அதீத இரத்தப் போக்கினால் மயக்கமுற்ற நிலையிலும் குடல் வெளித்தள்ளிய நிலையிலும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு அன்றைய தினம் இரவு 9.15 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார்.

வயிற்றினுள்  குருதிப்பெருக்கு தொடர்ந்ததோடு,

சுவாசப்பை மற்றும் சுவாச குழாய்கள் கிழிந்தமையால் (Lung and tracheo bronchial injury) ஏற்பட்ட நெஞ்சறை காற்று கசிவினாலும் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த நபர், அவசர சிகிச்சை குழுவினரின் கடும் முயற்சியினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

சத்திரசிகிச்சை குழுவினரால் இருபக்க நெஞ்சினுள்ளும் துளையிடப்பட்டு குழாய்கள் அனுப்பப்பட்டு நுரையீரலை செயலிழக்க செய்த காற்று வெளியேற்றப்பட்டு சத்திரசிகிச்சை கூடத்திற்கு அனுப்பப்பட்ட்டார்.

 

வைத்தியர் யோகானந்த் தலைமையிலான மயக்க மருந்து வைத்திய குழாமினரின் கடும் போராட்டத்திற்கு மத்தியில், சத்திர சிகிச்சை நிபுணர்களான வைத்தியர் வரணிதரன் மற்றும் வைத்தியர் ஜயந்தன் இருவரும் இணைந்து அறுவைசிகிச்சையை மேற்கொண்டிருந்தனர்.

ஆழமான கத்திக்குத்து ஏற்பட்டதையடுத்து இரத்தக் குளமாக இருந்த மேல் வயிற்றில் பாய்ந்த கத்தி இரைப்பையை துளைத்துச் சென்று கணையச் சுரப்பியை( Pancreas) கிழித்துக்கொண்டு மண்ணீரல் நாடியையும்( Splenic artery) இதயப் பெருநாடியையும்( Aorta) கிழித்திருந்த நிலையில் இரத்தம் பீறிட்டு பாய்ந்து கொண்டிருந்தது.

 

விரைந்து செயற்பட்ட சத்திரசிகிச்சை நிபுணர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் நுணுக்கமான முறையில் இரத்த நாடிகளை சரிசெய்து குருதிப்பெருக்கை கட்டுப்படுத்தினர்.

இதன்பின்னர்,

குடலிலும் இரைப்பையிலும் ஏற்படுத்தப்பட்டிருந்த 5 துளைகளும் (gastric and small bowel perforations) சரிசெய்யப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படடு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது உடல் நிலைதேறி வருகிறார்.

இவ்வாறு,

இதயப் பெருநாடி கிழிந்தவர்களை காப்பாற்றுவது அரிதிலும் அரிது.

இவ்விடயத்தில் இணைந்து பணியாற்றிய வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களதும், குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு, இரத்த வங்கி, சத்திரசிகிச்சை கூடம் மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஊழியர்கள் மயக்க மருந்து வைத்தியர்களது உழைப்பு மெச்சுதலுக்குரியது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *