தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி விரைவான தீர்வு அல்ல- கோட்டாபயவுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி விரைவான தீர்வு அல்ல என இலங்கை வைத்திய சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தை அந்த சங்கம் பாராட்டியுள்ளது. குறிப்பிடத்தக்க அளவு மிக வேகமான தடுப்பூசி வழங்கல் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டாலும், கணிசமான அளவு நோய் எதிர்ப்பு சக்தியை எங்களால் உருவாக்க முடியாது என்பதை தாம் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்

தடுப்பூசி வழங்கியதன் பின்னர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கு எடுக்கும் கால அளவைக் கருத்திற் கொண்டு அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையுடன் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நோயை விரைவில் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தை இலங்கை வைத்திய சங்கம் பாராட்டியதுடன், நீண்டகால சிகிச்சைக்கு தடுப்பூசியே தீர்வு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தொற்றுநோய் வேகமாகப் பரவி வருவதாகவும், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் மாத்திரமே இத்தகைய தொற்றுநோய்கள் உலகம் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகவும் இலங்கை வைத்திய சங்கம் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி தம்முடனான கலந்துரையாடலில் அதிக அவதானம் செலுத்தியதாகவும், சங்கம் முன்வைத்த திட்டங்களுக்கு பெருமளவில் அவர் உடன்படுவார் எனவும் வைத்திய சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது தினமும் பதிவாகி வரும் கொரோனா இறப்புகள், சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் பதிவான நோயாளிகளே எனவும், இறப்புகளின் எண்ணிக்கையும், கடுமையாக பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அடுத்த மூன்று வாரங்களில் அதிகரிக்கக்கூடும் எனவும் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன கூறியுள்ளார்.

நோயாளிகளின் எண்ணிக்கையை விரைவாக அதிகரிப்பது சுகாதாரத் துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என இலங்கை வைத்திய சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கிராம சேவகர் பிரிவுகளை மாத்திரம் தனிமைப்படுத்துவதன் மூலம் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், பி.சி.ஆர் முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் பாதிக்கப்பட்ட நபர் இந்த நோயை இன்னும் பலருக்கு பரப்புவதற்கான வாய்ப்பாக அமைவதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *