தடுப்பூசி பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆகஸ்ட் 12 வரை 146 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் பெப்ரவரி 16 ஆம் திகதி தொடங்கியது.
எனினும், இப்போது வரை 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தகவல் அறியும் உரிமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாரஹேன்பிட்ட, இராணுவ மருத்துவமனையில் இந்தியாவின் அஸ்ட்ராசெனேகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுள்ளனர்.
மேலும், நாடாளுமன்றத்தில் உள்ள சுகாதார மையத்தில் 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V இன் இரண்டு டோஸ்களும் போடப்பட்டுள்ளன.
இதுவரை தடுப்பூசி போடப்படாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதன் காரணத்திற்கான விவரங்கள் எங்களிடம் இல்லை என தகவல் அதிகாரியும் நாடாளுமன்றத்தின் உதவி பொதுச்செயலாளருமான டிக்கிரி கே.ஜெயதிலக தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் மாடர்னா, பைசர், சிஹோர்பார்ம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரங்கள் நாடாளுமன்றத்தில் இல்லை என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, கடந்த 14 நாட்களில் ஐந்துநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.