கொரோனா நோயாளிகளை வீடுகளில் வைத்து சிகிச்சையளிப்பது தொடர்பில் ஆராயும் அரசு!
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், கொவிட் 19 தொற்றாளர்களாக இருந்தாலும் அவர்களில் நோய் அறிகுறிகள் ஏற்படாதவர்களை வீடுகளில் தங்க வைத்து சிகிச்சையளிப்பது குறித்த விசேட நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது.
இந்தநிலையில், இதற்கு தேவையான சுகாதார ஆலோசனைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விரைவில் வெளியிடவுள்ளதாக கொரோனா கட்டுப்படுத்தல் சம்பந்தமான ராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றாளர்களை வீடுகளில் தங்க வைத்து சிகிச்சையளிக்கவும் வீடுகளில் உள்ள ஏனையோருக்கு நோய் தொற்றாத வகையில் தனிமைப்படுத்தி வைக்கவும் ஆலோசனை வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நோய் அறிகுறிகள் தென்படும் தொற்றாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்க முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.