FEATUREDLatestNewsTOP STORIES

மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகளை சூறையாடிய 21 வயது பெண்!!

வவுனியாவில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த சோடாவை கொடுத்து அவர் மயங்கியதும் அவரிடமிருந்து தங்க நகைகளை திருடிச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா, பண்டாரிக்குளம் நாவலர் வீதியில் வசிக்கும் மூதாட்டி சுகயீனம் காரணமாக கடந்த புதன்கிழமை மருந்து எடுப்பதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

மருந்து எடுத்து விட்டு குறித்த வயோதிப பெண் வைத்தியசாலையில் இளைப்பாறிய வேளை அங்கு வந்த யுவதி ஒருவர் அவருடன் நீண்ட நேரமாக அனுதாபமாக உரையாடி வயோதிப பெண் தொடர்பான தகவல்களை பெற்றுள்ளார்.

உடல் சுகயீனம் என்பதால் தனியாக வீட்டிற்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவித்த அந்த யுவதி முச்சக்கர வண்டி ஒன்றில் மூதாட்டியின் வீட்டிற்கு அழைத்து சென்றதுடன் மயக்க மருந்து கலந்து சோடாவையும் பருக கொடுத்துள்ளார்.

வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில் மூதாட்டி மயக்கமடைந்ததும்,

அவர் அணிந்திருந்த சங்கிலி, மோதிரம் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என ஏழரைப்பவுண் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

மயக்கம் தெளிந்து மூதாட்டி எழுந்ததும் நகைகள் திருட்டு போனதை அறிந்து உடனடியாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி வழிகாட்டலில்,

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு உப காவல்துறை பரிசோதகர் கியான் தலைமையில் காவல்துறையை சேர்ந்த திசாநாயக்கா (37348), விக்கிரமசூரிய (36099), டிலீபன் (61461), உபாலி (60945) சங்கயரொகான் (31043), தயாளன் (91792), திசாநாயக்கா (18219) ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது,

வவுனியா, மதீனாநகரில் வசித்து வந்த யாழ் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

திருடப்பட்ட நகையில் நாலரைப் பவுண் நகை குறித்த யுவதியிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன்,

மேலதிக விசாரணைகளின் பின் யுவதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *