தமிழர் பகுதியில் புதையல் தோண்டிய முயற்சி தற்போதைக்கு தோல்வியில் முடிவு!!
முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கை தோல்வியில் நிறைவடைந்துள்ளது.
இறுதிக் கட்ட யுத்ததின் போது புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த தங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட இடமான முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் அகழ்வு நடவடிக்கை நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த அகழ்வுப் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்கனவே இரண்டு குழிகள் தோண்டப்பட்டு நீர் நிரம்பிய நிலையில் காணப்படமையினால் நீரைவெளியேற்றும் பணிகள் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டன.
எனினும்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த கிடங்குகளில் இருந்த நீரை வெளியேற்ற முடியாமல் போன நிலையில் அகழ்வுப் பணிகள் நேற்று மீண்டும் 2 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
நேற்றைய தினம் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க சென்ற கனரக வானம் சேற்றுக்குள் புதைந்தமையினால் அகழ்வுப் பணிகள் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.