சுயஸ் கால்வாயில் கப்பல் மீட்கும் நடவடிக்கை பின்னடைவை சந்தித்தால் இலங்கைக்கும் பாதிப்பு வரும்! அமைச்சர் தகவல்
சுயஸ் கால்வாயில் பாரிய சரக்கு கப்பல் சிக்குண்டிருக்கின்றமையால் இலங்கையில் எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
குறித்த சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்குண்டுள்ளமையால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் அதன் விலை அதிகரிக்கக் கூடும் என்று பரவலாக முன்வைக்கப்படுகின்றமை தொடர்பில் தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,
மத்திய கிழக்கில் கல்ஃப் வலயத்தினூடாகவே எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு எரிபொருள் கப்பல்கள் வருகை தரவுள்ளன.
எனவே சுயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல் இலங்கையில் பெற்றோலிய நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனினும் இதே நிலைமை தொடருமாயின் இலங்கையின் ஏற்றுமதித்துறையில் பாதிப்புக்கள் ஏற்படக் கூடும்.
அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான இலங்கையின் ஏற்றுமதி செயற்பாடுகளில் 60 சதவீதமானவை சுயஸ்கால்வாயினூடாகவே இடம்பெறுகின்றன.
எனினும், இலங்கையின் பிரதான இறக்குமதியாளர்கள் சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளாகும். எனவே, இலங்கையில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என்று பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.