இலங்கையின் செயற்பாடு -மகிழ்ச்சியில் அமெரிக்கா!!

இலங்கையில் தற்பொழுது காணப்படும் தேர்தல் முறையை மாற்றுவதற்காக நாடாளுமன்றத்தினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மகிழ்ச்சியடைவதாக, அந்நாட்டுத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நாடாளுமன்றத்தில் நேற்று (02) சந்தித்து கலந்துரையாடியபோதே, அமெரிக்கத் தூதுவர் இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சபாநாயகரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தசந்திப்பில் அமெரிக்கத் தூதரகத்தின் பிரதி அரசியல் தலைவர் மார்கஸ் காப்பென்டர் மற்றும் நாடாளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹணதீர ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட இரு நாட்டுக்கும் பரஸ்பர நன்மையளிக்கும் விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன. விசேடமாக எதிர்காலத்தில் நாட்டின் எரிசக்தித் துறையில் அமெரிக்காவினால் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் முதலீடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

முழு உலகமும் எதிர்கொண்டுள்ள பேரழிவைத் தரும் கொவிட் தொற்றுநோய் மத்தியில் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அமெரிக்கத் தூதுவர், சபாநாயகரிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *