FEATUREDLatestNews

சூறாவளியாக மாறும் வாய்ப்பு – விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இன்று (26) முற்பகல் 11.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து 170 கிலோமீற்றர் தொலைவிலும் திருகோணமலையிலிருந்து 240 கிலோமீற்றர் தொலைவிலும் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள இந்த அமைப்பு, நாட்டின் கிழக்கு கரையை அண்மித்து நகர்ந்து நாளை (27) மேலும் வலுவடைந்து சூறாவளியாக மாற வாய்ப்புள்ளது.

இதன் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் டி என் சூரியராஜா ( T.N.Sooriyarajah) தெரிவித்துள்ளார்.

நேற்று முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்கள் மற்றும் கரையோர பிரதேசங்களை அண்டி வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி, ஊர் காவல்துறை, உடுவில், கோப்பாய் சண்டிலி பாய், யாழ்ப்பாணம், நல்லூர், பருத்தித்துறை, சங்கானை, காரை நகர், நெடுந்தீவு , தெள்ளிப்படை பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த பாதிப்பு உணரப்பட்டுள்ளது.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2040 குடும்பங்களைச் சேர்ந்த 7436 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என டி என் சூரியராஜா தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *