பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்திய மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள்!!
யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கும் நிகழ்விற்காக இந்திய மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று(09/02/2023) பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
எதிர்வரும் 11 ஆம் திகதி இந்திய உதவியுடன் யாழில் அமைக்கப்பட்டுள்ள மத்திய கலாசார நிலையத்தை திறந்து வைப்பதற்காகவே இவர்கள் யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம்,
கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழு பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சற்று முன்னர் வந்திறங்கியுள்ளனர்.
இவ்வாறு வந்திறங்கிய இந்திய உயர்மட்ட குழுவினை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான்,
யாழ் இந்திய துணைத் தூதுவர் சிவசேனை அமைப்பின் தலைவர் ஆகியோர் வரவேற்றனர்.
இந்திய அரசின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்,
அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்துள்ள இணை அமைச்சர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த கட்டடம் 8 வருடங்களுக்கு பின்னர் மக்களின் பயன்பாட்டுக்காக கையளிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.