FEATUREDLatestNews

“மோடியிடம் சொல்..” பெண்ணின் கண்முன்னே கணவரைக் கொன்று பயங்கரவாதிகள் சொல்லி அனுப்பிய செய்தி

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. பெஹல்காமில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் மனைவி, மகன் கண்முன்னே கர்நாடகாவின் சிவ்மொஹாவை சேர்ந்த மஞ்சுநாத் என்ற தொழிலதிபரையும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். மனைவி பல்லவி, மகன் கண்முன்னே மஞ்சுநாத் உயிரிழந்தார்.

இதுகுறித்து பல்லவி கூறுகையில், நான், என் கணவர் மற்றும் மகன் மூவரும் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தோம். நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் பெஹல்காமில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது என் கண்முன்னே அவரை கொன்றனர். கெட்ட கனவுபோல் இருக்கிறது. நான்கு பேர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

என் கணவரை கொன்றதை போல் என்னையும் கொன்றுவிடுங்கள் என்று அவர்களிடம் கூறினேன். அப்போது, உன்னை கொல்ல மாட்டேன், நடந்ததை உங்கள் பிரதமர் மோடியிடன் போய் சொல் என்று ஒரு பயங்கரவாதி கூறினார்” என்றார்.

பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட 26 பேரும் ஆண்களே ஆவர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. சில பெண்களுக்கு லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளது.