மன்னாரில் புகையிரதம் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் தற்கொலை!!

கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி சென்ற புகையிரதத்தின் முன் குடும்பஸ்தர் ஒருவர் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் உயிலங்குளம் காவல்துறை பிரிவில் மாதோட்டம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் நேற்றுமுன்தினம் (19) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரிழந்தவர் மணற்குளம் தண்ணீர் தாங்கி கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி நகுலேஸ்வரன் (வயது-37) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் குறித்த சம்பவத்தின் போது அவர் தலையில் தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும் அவ்வேளையில் மது போதையில் இருந்துள்ளதாகவும் காவல்துறையினரின் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

இவரின் சடலத்தை உடன் ரயிலில் ஏற்றிக்கொண்டு மன்னார் புகையிரத நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு ரயில் சென்றதாகவும் விசாரணை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மரண விசாரணையும் பிரேத பரிசோதனையும் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *