யாழில் இடித்தழிக்கப்பட்ட பிள்ளையார் ஆலயம்- முரணான தகவல்களை வழங்கிய சந்தேக நபர்!!
யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலை மிருசுவிலில் அமைந்திருந்த பிள்ளையார் கோவிலை இடித்தழித்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடையில் வீதியோரமாக அமைந்திருந்த சிறிய பிள்ளையார் ஆலயம் கடந்த 7ஆம் திகதி இடித்து உடைக்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் கொடிக்காம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் ஆலயத்தை டிப்பர் வாகனம் ஒன்றினால் மோதியே உடைத்தமையை கண்டறிந்தனர்.
அதன் அடிப்படையில் குறித்த டிப்பர் வாகனம் தொடர்பிலான தகவலினை பெற்று டிப்பர் வாகனத்தை தேடியுள்ளனர். இந்நிலையில் குறித்த டிப்பர் வாகனம் யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் பயணித்த போது கொடிகாமம் பொலிஸாரினால் வாகனம் வழிமறிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதி கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப கட்ட விசாரணையில் டிப்பர் சாரதி முல்லைத்தீவை சேர்ந்தவர் எனவும் , சாரதி முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி வருவதால் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
இதேவேளை இடித்தழிக்கப்பட்ட பிள்ளையார் கோவிலை மீள கட்டும் பணிகளை சிலர் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.