ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது? – அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, 2 நாடுகளும் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், “தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், அங்கு ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது? ஈரான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது. அந்த நாடு அணு ஆயுதங்கள் உருவாக்குவதை தடுப்பதே நமது தாக்குதலின் முக்கிய நோக்கம்” என்று பதிவிட்டுள்ளார்.