‘இந்தியன் 2’ பட வழக்கு முடித்து வைப்பு!!

லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை ஷங்கர் இயக்குகிறார், நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 திரைப்படம் உருவானது. இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்த நிலையில், திடீரென படப்பிடிப்பு பணிகள் நின்றுபோனது.

 

இந்த நிலையில், இந்தியன்-2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் தொடர்ந்த, இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து லைகா சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

 

இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, லைகா நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதி நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது மத்தியஸ்த நடைமுறையில் பங்கேற்க உள்ளோம்.
அந்த சமயத்தில் ஷங்கர் வேறு படம் இயக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்த போவதில்லை’’ என்றும் கூறப்பட்டது.

 

அப்போது ஷங்கர் தரப்பில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *