சீனத் தூதரகத்திற்கு உடனடியாகவே பதிலடி கொடுத்த மக்கள் வங்கி…. கறுப்புப் பட்டியல் விவகாரம்!!

மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கும் சீன தூதரகத்தின் தீர்மானத்துக்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் வங்கி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி நீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பசளைக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் நிலவிய உடன்படிக்கையை மீறி,

கடன் நாணய கடிதத்துக்கான கொடுப்பனவை செலுத்தாததன் காரணமாக மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்திருந்தது.

சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அலுவலகத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்துக்கமைய, இலங்கையுடன் மேற்கொள்ளப்படும் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களின் போது, மக்கள் வங்கியினால் விடுவிக்கப்படும் கடன் நாணய கடிதத்தை ஏற்றுக்கொள்வதை தவிர்க்குமாறும், அபாயத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும், அனைத்து சீன வணிக நிறுவனங்களுக்கு அறிவிப்பதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தினால்,

குவின்ங்டாவோ சீன நிறுவனம், அதன் உள்நாட்டு முகவர் மற்றும் மக்கள் வங்கிக்கு எதிராக, வணிக மேல் நீதிமன்றத்தினால் கடந்த 22ஆம் திகதி இடைக்காலத் தடையுத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என அரச தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

இந்தத் தடை உத்தரவின் மூலம், சீன நிறுவனமான குவின்ங்டாவோ சீவின் பயோடெக் குரூப் கம்பனி என்ற நிறுவனத்துக்குத் திறக்கப்பட்ட கடன் கடிதத்தின் கீழ், மக்கள் வங்கியின் மூலம் எவ்விதக் கொடுப்பனவுகளையும் வழங்க முடியாது.

குறித்த சீன நிறுவனம் மற்றும் அதன் உள்நாட்டு முகவர் ஆகியோர், இந்தக் கடன் கடிதத்தின் கீழ் எவ்வித கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில், வணிக மேல் நீதிமன்றத்தின் மூலம் இடைக்காலத் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் கீழ், சீன நிறுவனத்தின் மூலம் உயிரியல் சேதனப் பசளையை இலங்கைக்கு அனுப்புவதற்கு அவசியமாக இருந்த போதும், அதில் நுண்ணுயிர்கள் இருக்க முடியுமென்று கப்பல் ஆலோசனைகளில் குறித்த நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை மூலம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகள் பரீட்சிக்கப்பட்டுள்ளதுடன், பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒருசில பக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்கள் அதில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

அவை, கமத்தொழில் அமைச்சின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியைக் கொண்ட விலை மனுக் கோரலின் மூலம் பெற்றுக்கொண்ட ஏற்றுமதியின் ஒரு பகுதியாகும் என அரச தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *