அரச வங்கியில் பாரிய தங்க நகை கொள்ளை….. சிக்கிய வங்கி ஊழியர்கள்!!
மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள அரச வங்கியின் பெட்டகத்திலிருந்து சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை திருடிய குற்றச்சாட்டின் பேரில் வங்கி ஊழியர்கள் மூவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அவர்களில் துணை முகாமையாளர், செயற்பாட்டு முகாமையாளர் மற்றும் சேவை உதவியாளர் ஆகியோர் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவுக்கு அண்மையில் முறைப்பாடு கிடைத்திருந்தது. அதன்படி, வங்கிக்கு விசாரணைக் குழுவினர் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை மீண்டும் அடகு எடுப்பதற்கு நபர் ஒருவர் வந்த போது வங்கியில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. மறுநாளே வங்கி ஊழியர்கள் பெட்டகத்தை சோதனையிட்டதில் 13 தங்க நகைகள் அடங்கிய பொட்டலங்கள் காணாமல் போனது தெரியவந்தது.
காணாமல் போன தங்கத்தின் எடை 873 கிராம். இதன் பெறுமதி சுமார் 2 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வங்கியின் துணை முகாமையாளரை வங்கி நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்திய விசாரணை அதிகாரிகள், நகைகள் காணாமல் போன சம்பவத்தில் அந்த அதிகாரியுடன் வங்கியில் பணிபுரியும் இரு பெண்களும் ஈடுபட்டதை கண்டுபிடித்துள்ளனர்.
வங்கியின் செயற்பாட்டு முகாமையாளர் மற்றும் சேவை உதவியாளர் ஆகியோர் தன்னுடன் இணைந்து இந்தத் திருட்டைச் செய்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.பின்னர், இரண்டு சந்தேக நபர்களும் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
மூன்று நாட்களாக வங்கி மேலாளர் இல்லாத நேரத்தில் தங்களிடம் இருந்த பாதுகாப்பு சாவியை பயன்படுத்தி தங்கத்தை எடுத்து சென்றதாக கூறியுள்ளனர். முதலில் தங்கம் அடங்கிய 5 பொட்டலங்கள் திருடப்பட்டதாகவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவைகளில் தலா 4 தங்க பொதிகளும் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் அவற்றை அப்பகுதியிலுள்ள தங்க நகை கடைகளுக்கு விற்று 137 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தொகையில் 57 இலட்சம் ரூபாவைப் பெற்ற துணை முகாமையாளர்,தான் கட்ட வேண்டிய கடனைத் தீர்த்ததாக விசாரணை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. செயற்பாட்டு முகாமையாளர் 50 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளார் மேலும் அந்த தொகையை அவர் தனது மகளுக்கு வீடு வாங்குவதற்காக வங்கியில் வைப்பு செய்துள்ளார். சேவை உதவியாளர் 30 இலட்சம் ரூபா பணத்தில் முச்சக்கர வண்டி மற்றும் காணியொன்றை கொள்வனவு செய்துள்ளார்.
மேலும், இவர்கள் விற்பனை செய்த தங்க நகைகளை சில தங்கக் கடைகளில் உருக்கி வேறு நபர்களுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொது முறைப்பாட்டுப் பிரிவினர் சந்தேகநபர்கள் மூவரையும் இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலப்படுத்திய நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.