அன்று இரண்டு, இன்று மூன்று: அறிமுக போட்டியில் அசத்திய டி நடராஜன்- பாராட்டிய விராட் கோலி

அறிமுகமான ஒருநாள் போட்டியில் இரண்டு விக்கெட் வீழ்த்திய நடராஜன், இன்று அறிமுகமான டி20-யில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. கான்பெர்ராவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய இந்தியா 161 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியாவால் 150 ரன்களே அடிக்க முடிந்தது. ஆஸ்திரேலியாவை 150 ரன்னில் கட்டுப்படுத்த சாஹல், டி நடராஜன் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சே முக்கிய காரணம்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகிய நடராஜன் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இன்றைய டி20 அறிமுக போட்டியிலும் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மேக்ஸ்வெல்லை 2 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆக்கி வெளியேற்றினார். மேலும் ஆர்கி ஷார்ட், மிட்செல் ஸ்டார்க்கையும் வெளியேற்றினார்.
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் விராட் கோலி கூறுகையில் ‘‘ஜடேஜாவுக்கு தலையில் அடிபட்டதால் இன்னும் சற்று மயக்கமாக இருக்கிறார். கன்கசன் மாற்று வீரர் என்பது விசித்திரமான விசயம். இன்று அது எங்களுக்கு சாதகமாக இருந்தது. அடுத்த முறை இதுபோன்று சாஹலுக்கு வாய்ப்பு கிடைக்காது. சாஹல் களம் இறங்கி சிறப்பாக பந்து வீசினார். ஆடுகளம் அவருக்கு ஏற்றபடி சாதகமாக இருந்தது.
அவர்களின் சிறப்பான தொடக்கத்தை பார்க்கும்போது, தோற்கடித்து விடுவார்கள் என்று நினைத்தோம். டி20 எப்படி வேண்டுமென்றாலும் செல்லலாம். நாங்கள் போதுமான அளவிற்கு நெருக்கடி கொடுத்தோம். ஆனால் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. நடராஜனை பார்த்தால், அவரால் மிகப்பெரிய அளவில் மேம்பட முடியும் போல் தோன்றுகிறார். ஹர்திக் பாண்ட்யா கேட்ச் திருப்புமுனை’’ என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *