மும்பைக்கு எதிராக ஐதராபாத் 300 ரன்களை குவிக்கும்.. டேல் ஸ்டெயின் கணிப்பு
ஐபிஎல் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக நேற்று ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அபாரமாக விளையாடிய இஷான் கிஷன் சதம் விளாசி அசத்தினார். அவர் மட்டுமல்லாமல் டிராவிஸ் ஹெட், நிதிஷ் குமார், கிளாசன் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவரில் 286 ரன்கள் குவித்தது.
ஐ.பி.எல். தொடரில் 250 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 4-வது முறையாகும். இதன் மூலம் ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டியில் அதிக முறை 250 ரன்களுக்கு மேலான ஸ்கோரை எடுத்த அணி என்ற சாதனையை ஐதராபாத் அணி படைத்துள்ளது.
அதற்கு அந்த அணி தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா, ஹெட் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இவர்களையடுத்து இந்த சீசனில் இஷான் கிஷன் இணைந்துள்ளார். அவர் முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தி உள்ளார். அவரையடுத்து நிதிஷ் ரெட்டி, கிளாசன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அவர்கள் 300 ரன்களை எடுப்பது வெகு தூரம் இல்லை.
இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 300 ரன்களை எட்டும் என தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் கணித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது, ஒரு சின்ன கணிப்பு. ஏப்ரல் 17 அன்று ஐபிஎல்லில் முதல் 300 ரன்களைப் பார்ப்போம்.
யாருக்குத் தெரியும், அது நடப்பதைப் பார்க்க நான் கூட அங்கே இருக்கலாம் என கூறியுள்ளார். ஏப்.17-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை – ஐதராபாத் அணிகள் மோதுகின்றனர்.
Small prediction.
April 17 we’ll see the first 300 in IPL.Who knows, I might even be there to see it happen.
— Dale Steyn (@DaleSteyn62) March 23, 2025