FEATUREDLatestNewsTOP STORIES

“தமிழர் இனப்படுகொலை நினைவு தினமாக” கனேடிய நாடாளுமன்றில் ‘மே 18’ அங்கீகரிப்பு!!

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு,

மே 18ஆம் திகதியை ‘தமிழர் இனப்படுகொலை நினைவு தினமாக’ அங்கீகரித்ததற்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

கனேடிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிற்கு முரணான அதாவது இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாகக் கண்டறியவில்லை.

புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடிக்க நடாத்தப்பட்ட மோதலின் இறுதிக் கட்டத்தில் இலங்கையின் உண்மையான நிலைமை குறித்து கனேடிய அரசாங்கத்திற்கு மிக உயர்ந்த மட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

இன்று, மோதல் முடிவடைந்து 13 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில்,

இலங்கை தனது நல்லிணக்கச் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதுடன் அது தொடர்பிலும் கனேடிய அரசாங்கத்திற்கு தொடர்ந்து தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றது.

இனப்படுகொலை என்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் நிறைய உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது ஐநா மனித உரிமைகள் பேரவை உட்பட அதன் எந்தவொரு அமைப்புகளோ இலங்கை மோதல்கள் தொடர்பாக ஒருபோதும் இப்படியான வார்த்தைகளை பயன்படுத்தப்படவில்லை என்பதை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது.

மேலும்,

இலங்கையின் நலன்களுக்குப் பாதகமான புலம்பெயர் நாடுகளில் உள்ள சிறுபான்மை அரசியல் உந்துதலுள்ள இலங்கை எதிர்ப்புக் கூறுபாடுகளால் மட்டுமே இலங்கையின் நிலைமைக்கு இந்த வார்த்தை தன்னிச்சையாகவும் தவறாகவும் பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் பாரிய சவால்களை எதிர்நோக்கி வரும் வேளையில்

கனேடிய நாடாளுமன்றத்தினால் இவ்வாறான தவறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமை மிகவும் வருத்தமளிக்கிறது.

இதேவேளை,

மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிப்பதற்கான பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த மிக முக்கியமான நாளில்,

ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கும் உலகின் முதல் தேசிய நாடாளுமன்றம் கனடா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *