2022 ஜனவரி முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்த வேண்டும்!!
முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் சட்டத்தை அடுத்த வருடம் (2022) முதல் மீண்டும் செயற்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த உத்தரவு 2018 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அந்த திட்டம் செயற்படுத்தப்படாததால் மாகாண மட்டத்தில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூன் 15ஆம் திகதி வரை அனைத்து முச்சக்கர வண்டி மீற்றர்களையும் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு இல்லாத முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.
இதன்படி,
மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகள் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னரும், தென் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகள் பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னரும், வடமேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகள் மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னரும், மத்திய மாகாணத்தில் முச்சக்கர வண்டிகள் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முன்னரும், சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் மே 15 ஆம் திகதிக்கு முன்னரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஜூன் 15 ஆம் திகதிக்கு முன்னரும் மீற்றர் பொருத்த வேண்டும் எனவும் அதன் பின்னர் முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக காவல்துறையினர் சட்ட நடவடிக்கை எடுப்பர் எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள 115,000 முச்சக்கர வண்டிகளில் 700,000 க்கும் அதிகமான முச்சக்கர வண்டிகள் வாடகை சேவையில் இருப்பதாகவும், நியாயமான கட்டணத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் தொழிற்சங்கத்தின் செயலாளர் டி.ஆர். பாலி தெரிவித்தார்.