17 வருடங்கள் முடிந்தும் கொஞ்சமும் குறையாத வலிகள்….. (நினைவேந்தல் புகைப்படங்கள்)!!

17 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தில் யாரும் எதிர்பார்த்திராத பாரிய அழிவு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் ஆட்சே பகுதியில் இருந்து புறப்பட்டது.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இதே ஞாயிற்றுக்கிழமையில் இடம்பெற்ற சுனாமி எனும் ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக உலக வாழ் மக்களால் மறந்துவிட முடியாது.

கடலுக்கடியில் உருவான அதிர்வெண் 9 தசம் 1 கொண்ட பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு அலைகள் கரைகளை தாக்கின.

இந்த சுனாமியின் சீற்றத்தால் 14 நாடுகளுக்கும் மேற்பட்ட 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் செத்து மடிந்தனர். இதில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

இலங்கையையும் இந்த ஆழிப்பேரலை விட்டு வைக்கவில்லை.

தமிழர் தாயகத்தில் ஆயிரக்கணக்கான மக்களை காவுகொண்டிருந்த இந்த அனர்த்தம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியது.

மக்கள் மனதில் நீங்கா வடுவாக பதிந்துவிட்ட சுனாமியால் இறந்தவர்களுக்கு வருடந்தோரும் இன்றைய டிசம்பர் 26 ஆம் திகதிளில் கடலோர பகுதிகளில் அஞ்சலிகள் செலுத்தப்படுகிறன.

இந்த அனர்த்தம் இடம்பெற்று 17 வருடங்கள் கடந்த போதிலும் அதனால் ஏற்பட்ட வடுக்களையும், இழப்புக்களையும் எவராலும் ஈடுசெய்ய முடியாது.

தமது உறவுகளையும் உடைமைகளையும் இழந்த மக்கள் தற்போதும் அந்த கெட்டக் கனவை மறக்க நினைத்தாலும், கண்முன் நிழலாடும் அந்த காட்சிகள் கண்ணில் நீர்த்தாரைகளை சொரிகின்றது.

கிறிஸ்துவுக்கு முன் 426 ஆம் ஆண்டிலிருந்தே இந்த அனர்த்தம் ஆங்காங்கே சிறிதளவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்ற போதிலும் 2004 ஆம் ஆண்டுக்கு பின்னரே “சுனாமி” என்ற பெயரின் இலக்கணத்தை முழு உலகமும் அறிந்துக்கொண்டது.

இந்த வீரிய அனர்த்தம் இரண்டரை இலட்சம் மக்களை காவுகொண்டிருந்தது. போதிய விழிப்புணர்வு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலகட்டம் என்பதால் சுனாமிக்கு இவ்வாறு இலட்சக்கணக்கான மக்கள் பலி கொடுக்கப்பட்டனர்.

தற்போதைய காலகட்டத்தில் புதிய தொழிநுட்ப வசதிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அனர்த்தம் வருவதற்கு முன்னர் பாதுகாக்கும் நடைமுறைளும் உலக நாடுகளில் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.

எவ்வாறெனினும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக இருந்தது 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இதே ஞயிற்றுகிழமை ஆட்கொண்ட சுனாமி பேரலை தான் என்றால் மிகையாகாது.

இந்த அனர்த்தம் அந்த காலக்கட்டத்தில் இலங்கையில் அரசியல் சூட்சுமங்களையும் வெளிகொண்டு வந்திருந்தது.

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தை நேரடியாக பார்வையிடச் சென்றிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான், தமிழர் தாயக இழப்புக்களை பார்வையிடுவதிலிருந்து அப்போதைய அரசதலைவர் சந்திரிக்கா குமாரதுங்க தடுத்திருந்தார்.

ஆழிப்பேரலைக்கு பின்னரான நிவாரண உதவிகள் தமிழர் தாயகத்திற்கு கிடைப்பதும் அரசியல் சூழ்ச்சிகளால் தடுக்கப்பட்டன.

அப்போதைய தண்ணீரில் தத்தளித்த தமிழர் தாயகத்திற்கு உதவாத அரசியலை தற்போது கண்ணீரில் தத்தளிக்கும் வகையில் பெருந்தேசியவாதிகள் முன்னெடுத்து வருகின்றமை தமிழ் மக்கள் அறிந்த நிதர்சனம்.

இதேவேளை,

இன்று பல இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

யாழ். வடமராட்சி உடுத்துறை சுனாமி நினைவாலயம்

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது.

உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை அஞ்சலித்தனர்.

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர்.

கடந்த 2004 டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் பேசாலை வேளாங்கண்ணி கடற்கரை

சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் இடம்பெற்றது.

மன்னார் பேசாலை வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் மன்னார் மாவட்ட கலங்கரை கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குனரும், மன்னார் பிரதேச சபையின் உறுப்பினருமான ஏ.ரி.லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்று காலை 9.25 குறித்த கடற்கரை பகுதியில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிண்ணியா – தோனா கடற்கரை மீனவர் சங்க கட்டிட வளாகம், கடலூர் முருகன் கோயில்

கிண்ணியா பிரதேச செயலகமும் அல் ஹிதாயா மீனவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு இன்று(26) காலை தோனா கடற்கரை மீனவர் சங்க கட்டிட வளாகத்தில் இடம்பெற்றது.

கிண்ணியா கடலூர் முருகன் கோயிலும் சுனாமி ஆழிப்பேரலை நிகழ்வு உணர்வு பூர்வமாக கோயில் வளாகத்தில் இடம் பெற்றது. கோபால சிங்கம் புகிந்தன் சர்மா குருக்கள் விசேட பூஜை வழிபாடுகளை நடாத்தினர்.

பொது மக்கள் இணைந்து கோயிலுக்கு முன்னால் உள்ள கடலில் மலர் தூவி தங்களது அஞ்சலியினை கண்ணீர் மல்க செலுத்தினர்.

வவுனியா – பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுதூபி

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர்நீத்தவர்களிற்கான 17ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.

பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் குறித்த பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவுபேரூரைகளும் இடம்பெற்றது.

குறித்த நினைவு தூபி சுனாமி பேரலை ஏற்பட்டு 31 ஆம் நாளில் நரசிங்கர் ஆலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையின் முதலாவதாக அமைக்கப்பட்ட தூபியாகவும் விளங்குகின்றது.

சுனாமி பேபியின் இல்லத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுதூபி

மட்டக்களப்பில் அபிலாஷ் எனும் சுனாமி பேபி அவரது இல்லத்தில் அமைந்துள்ள நினைவுதூபியில் அஞ்சலி செலுத்தினார்.

தனது இல்லத்தில் வைத்துள்ள சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தூபில் இன்று பெற்றோர் உறவினர்களுடன் இணைந்து சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினார்.

சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்த அனைத்து உறவுகளுக்கும் தாம் இந்த நேரத்தில் அஞ்சலி செலுத்துவதாக அபிலாஷ் தெரிவித்தார்.

சுனாமியில் இறந்தவர்களுக்கு மலையக மக்களும் அஞ்சலி

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வான ஆழி பேரலை அனர்த்தம் காலை 9.25க்கு இடம்பெற்றது.

இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தினர்.

மட்டக்களப்பு – நாவலடி சுனாமி நினைவுதூபி

சுனாமியின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பு நாவலடி நினைவு தூபியில் இடம்பெற்றது.

ஆழிப் பேரலை அனர்த்ததின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்று காலை 9.25 மணியளவில் நடைபெற்றது.

நாவலடியில் உள்ள சுனாமி நினைவுத்தூபி அருகில் நினைவுகூரும் நிகழ்வு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.

இதன்போது விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்று சுடரேற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

அம்பாறை – காரைதீவு சுனாமி நினைவுதூபி முன்றல்

அம்பாறை – காரைதீவு பிரதேச நினைவு தின நிகழ்வுகள் காரைதீவு கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவுத்தூபி முன்றலில் இந்துமத வழிபாடுகளுடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிரில், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கே. குமாரசரி, காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள், ஆலய நிர்வாகிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ். பல்கலையில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

கடந்த 2004ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு நாளில் ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

17ஆவது ஆண்டு நிறைவையொட்டி இந்த நினைவேந்தல் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ். பல்கலை வளாகத்தில் ஆத்மார்த்ம ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த அனர்த்தம் ஈடுசெய்ய முடியாத பல உயிர்கள் மற்றும் உடமைகள் இழப்புக்களை ஏற்படுத்தி அனைவரது மனதிலும் நீங்காத ஒரு வடுவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *