17 வயது மாணவன் வீட்டில் சண்டையிட்டு பெற்றோரையும், காவல்துறையையும் திசை திருப்ப செய்த காரியம்!!
வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த 17 வயதுடைய மன்சூர் அன்ஸப் என்ற மாணவன் காணாமல் போன நிலையில் கண்டுபிடித்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 28 ஆம் திகதி வீட்டை விட்டு சென்றிருந்த மேற்படி மாணவன், வீடு திரும்பவில்லை.
இதனால்,
வாழைச்சேனை காவல் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர்.
காணாமல் போன மாணவன் சென்றிருந்த துவிச்சக்கரவண்டியும் அவர் அணிந்திருந்த சேர்ட் மற்றும் பாதணிகள் போன்றவை பாசிக்குடா – கல்மலை கடற்கரையில் இருந்து மறுநாள் 29ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது.
மாணவனின் பொருட்களை கண்டு கொண்ட பெற்றோரும், பிரதேச மக்களும் மாணவன் நீரில் மூழ்கி மரணமடைந்திருக்கலாம் எனும் சந்தேகத்தில் காவல்துறையினரின் உதவியுடன் சுழியோடிகள் கடும் பிரயத்தனம் எடுத்து மாணவனை தேடிய நிலையில் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.
இந்த நிலையில்,
காணாமல் போன மாணவனை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், மாணவன் வீட்டை விட்டு வெளியேறும் போது சில ஆடைகளையும், அவரிடமிருந்த சிறிதளவு பணத்தையும், தேசிய அடையாள அட்டை மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவைகளை எடுத்துச் சென்றுள்ள விடயம் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.
இந்நிலையில்,
மாணவனின் வட்ஸ் அப் ஒன்லைன் காட்டிய போது மாணவனுக்கு தகவல்அனுப்பப்படுகின்ற போது அதனை பார்த்து விட்டு தகவல் அனுப்பப்படும் இலக்கங்கள் தடைசெய்யப்பட்டு வந்தது.
இவ்வாறான விடயங்களை அவதானித்த காவல்துறையினர் மாணவன் எங்கேயோ தலைமறைவாகி இருக்கலாம் எனும் சந்தேகத்தில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந் நிலையில்,
காணாமல் போன மாணவனை ஐந்து நாட்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை (1) மாலை வவுனியா பகுதியில் வைத்து காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
வீட்டில் ஏற்பட்ட முரண்பாடு ஒன்றின் காரணமாகவே தான் வீட்டை விட்டு வெளியாகியதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது மாணவன் வாக்கு மூலம் வழங்கியுள்ளான்.
பெற்றோரை திசை திருப்பவே கடலோரம் சைக்கிளையும் அணிந்திருந்த சேர்ட்டையும் வைத்து விட்டு யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ் வண்டியில் வவுனியா சென்றுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.