LatestNews

யாழ். காரைநகரில் கொரோனா தொற்றாளர்: மருத்துவமனை உட்ப பல இடங்கள் முடக்கப்பட்டன!

வலி.மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சங்கானை மீன் சந்தை மற்றும் மதுபானசாலை என்பன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் 36 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சைக்கிள் கடை ஒன்றினைச் சேர்ந்த 6 பேரின் குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையும் 3 நாள்கள் மூடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் உட்பட 40 பேர் வரையில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் படி இந்த நடவடிக்கையை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளனர் என வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரன் ஐபிசி தமிழ் ஊடகப்பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொலைபேசியூடாக வினவியபோதே அவர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்களில் தொடர்புடையவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

கடந்த 21ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து காரைநகருக்கு வருகை தந்த அவர், 3 நாள்களுக்கு மேல் பல இடங்களுக்கு நடமாடிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று அவரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அவர் சென்றதால் வைத்தியசாலையை 3 நாள்களுக்கு மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வைத்தியசாலையின் சேவையாளர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த நபர் சங்கானை மீன் சந்தைக்குச் சென்றதால் அதனை மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் 36 வியாபாரிகள் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அவர் சைக்கிள் கடைக்குச் சென்ற நிலையில் அங்கு இருந்த 6 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சங்கானை மதுபானசாலைக்கும் சென்றார் என கண்டறியப்பட்ட நிலையில் மதுபானசாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 4 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்படவுள்ளனர். அதில் தொற்று இல்லை என முடிவு கிடைத்தால் மீன் சந்தை மற்றும் மதுபானசாலை என்பன திறக்க அனுமதிக்கப்படும் என்றும் மேலும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *