ஹோட்டலின் 5வது மாடியில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!!
நுவரெலியாவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தொழில் புரிந்து வந்த முகாமையாளர் ஒருவர் ஹோட்டலின் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை நுவரெலியாவில் உள்ள பிரதான சுற்றுலா ஹோட்டலின் (Green Araliya)5வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த ஹோட்டலில் முகாமையாளராக தொழில் புரிந்து வந்த கம்பளை தொலஸ்பாகே வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 47 வயதான தரங்க பிரியந்த ஹெட்டியாராச்சி என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சுற்றுலா ஹோட்டலின் ஊழியர்கள் நேற்று இரவு விருந்தொன்றை நடத்தியுள்ளனர்.
விருந்தின் பின்னர் அதில் கலந்துக்கொண்ட ஊழியர்கள், முகாமையாளரை அழைத்துச் சென்று 5 வது மாடியில் உள்ள அவரது அறையில் விட்டுள்ளனர்.
அறையின் ஜன்னல் அருகில் நின்றுக்கொண்டிருந்த முகாமையாளர் இன்று அதிகாலை 1.45 அளவில் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த முகாமையாளரின் சடலம் தொடர்பான விசாரணைகளை நுவரெலியா நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து நுவரெலியா காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.