சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமராட்சி மீனவர்கள்!!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்களின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் வடமராட்சி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

மீனவர்கள் கடந்த 31ஆம் திகதி முதல் பருத்தித்துறை – பொன்னாலை வீதியினை வழி மறித்து நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில் நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருந்தனர்.

அந்நிலையில்,

நேற்றைய தினம் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளமை , பொதுமக்களின் இயல்வு வாழ்வுக்கு இடையூறு விளைவித்தல் , கொரோனா அபாயம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பருத்தித்துறை காவல்துறையினர் , பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் போராட்டத்திற்கு எதிராக தடையுத்தரவை பெற்று இருந்தனர்.

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து நேற்றைய தினம் இரவு மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தினை கைவிட்டனர்.

 

இந்நிலையில்,

இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினத்தினை கரிநாளாக அனுஷ்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த மாதம் 27ஆம் திகதி கடலுக்கு சென்ற வத்திராயன் மீனவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் , இதுவரை காலமும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து மெழுகு திரிகளை ஏந்தி ,

கருப்பு கொடிகளுடன் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு சென்றதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன்

இழுவை மடி சட்டத்தை உடன் அமுல்படுத்துமாறும் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக  தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான கடற் தொழிலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் கஜேந்திரன் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய சுமந்திரன். கடற் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாமல் தொடர்ந்தும் நீடித்துக் கொண்டிருக்கிறது. இது குறித்த சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படத்த வேண்டும் என்று தெரிவித்ததுடன், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *