கடந்த வருடம் நாட்டில் வீதி விபத்துக்களில் சிக்கி இறந்தவர்களின் விபரங்கள் வெளியாகின!!
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற கோர வீதி விபத்துக்களில் சிக்கி 2470 பேர் பரிதாபகரமாக மரணத்தை தழுவியுள்ளனர்.
இந்த தகவலை சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபரும், சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண(Ajith Rohana) தெரிவித்தார்.
கடந்த வருடத்தில் மாத்திரம் 22000 வாகன விபத்துக்கள் நேர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவ்வாறு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சுமார் 14,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த காலப் பகுதியில், நாளொன்றிற்கு சுமார் 60 வாகன விபத்துக்கள் நேர்ந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார். இந்த காலப் பகுதியில் 7 பேர் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை,
இந்த ஆண்டு வாகன விபத்துக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். கடந்த 10 வருடங்களில், வாகன விபத்துக்களினால் அரசாங்கத்திற்கு 36,500 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
கவனயீனமாக வாகனங்களை செலுத்துவதே, வாகன விபத்துக்களுக்கான பிரதான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில், மதுபானம் அருந்திய நிலையில், வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.