கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதியுங்கள். முட்டாள்தனமான கருத்தை விடுத்து !!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உலக சுகாதார ஸ்தாபனத்திடம் பேசியதன் பின்னரே சைனோபார்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவரின் ஊடகப் பேச்சாளர் கூறுவது முட்டாள் தனமான கருத்தாகும். உலக சுகாதார ஸ்தாபனம் அவ்வாறானதொரு அமைப்பல்ல. இந்த கருத்திற்கு உலக சுகாதார ஸ்தாபனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
எனவே அதிகரித்துச் செல்லும் கொரோனாநிலைமையை கட்டுப்படுத்த மக்களின் வாழ்வாதாத்தை பாதிக்காத வகையில் கடுமையான பயண கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
தற்போது இந்தியாவை விட அபாயமான கட்டத்திலேயே இலங்கை காணப்படுவதாக வைத்தியத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஜூன் மாதத்தில் இலங்கையில் நாளொன்றுக்கு 200 மரணங்கள் பதிவாகக் கூடும் என்று வொஷிங்டன் பல்கலைக்கழகமும் அறிவித்துள்ளது.
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்கும் செயற்பாடு மிகவும் தாமதமாகவே எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை விட மிகக் கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டால் நிலைமை மோசமடைவதை கட்டுப்படுத்த முடியாது.
இலங்கை மருத்துவ சங்கம் , அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட மருத்துவ அமைப்புக்கள் இதனையே வலியுறுத்துகின்றன. அத்தோடு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டங்களும் முறையான ஒழுங்குபடுத்தல்களுடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.
காரணம் உலகில் இனங்காணப்பட்டுள்ள 7 வகையான நிலைமாறிய வைரஸ்களில் இலங்கையில் 6 வகையான வைரஸ்கள் இனங்காணப்பட்டுள்ளன. பிரேசில் வைரஸ் மாத்திரமே இன்னும் இனங்காணப்படவில்லை. இவற்றில் எந்தெந்த வைரஸ்கள் தடுப்பூசியின் மூலம் கட்டுப்படுத்தக் கூடியவை என்பது தெரியாது.
எனவே தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை முறையாக முன்னெடுக்க வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உலக சுகாதார ஸ்தாபனத்திடம் பேசியதன் பின்னரே சைனோபார்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவரின் ஊடகப் பேச்சாளர் கூறுவது முட்டாள் தனமான கருத்தாகும்.
உலக சுகாதார ஸ்தாபனம் அவ்வாறானதொரு அமைப்பல்ல. இந்த கருத்திற்கு உலக சுகாதார ஸ்தாபனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு அவசர பயன்பாட்டுக்காக மாத்திரமே சைனோபார்ம் தடுப்பூசி வழங்கியுள்ளதாகவும் , இதன் பக்க விளைவுகள் தொடர்பான ஆய்வுகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.