போப் பிரான்சிஸ் உலகத்திற்கு அளித்த கடைசி செய்தி என்ன?
ஏழைகள் மீதான அக்கறை மற்றும் முதலாளித்துவத்தை விமர்சிப்பதன் காரணமாக, சேரிகளின் போப் என்று அழைக்கப்பட்ட, போப் பிரான்சிஸ், கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இன்று தனது 88வது வயதில் காலமானார்.
இன்று போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் துக்கம் அனுசரிக்கும் வேளையில் நேற்று அவரின் கடைசி ஈஸ்டர் செய்தி உலக அமைதிக்கான கருத்துக்களை தாங்கி நிற்கிறது.இந்த செய்தி உலகிற்கு அவரின் ஒரு ஆழமான பிரியாவிடையாக மாறியுள்ளது.
அவரது ஈஸ்டர் செய்தியில், “எவ்வளவு பெரிய மரண தாகம், கொலைக்கான தாகம், நம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பல மோதல்களில் நாம் ஒவ்வொரு நாளும் காண்கிறோம்! பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது, குடும்பங்களுக்குள்ளும் கூட, எவ்வளவு வன்முறையை நாம் காண்கிறோம்! பாதிக்கப்படக்கூடியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீது சில நேரங்களில் எவ்வளவு அவமதிப்பு இழைக்கப்படுகிறது!.
இந்த நாளில், நாம் அனைவரும் புதிதாக நம்பிக்கை வைத்து, நம்மை விட வித்தியாசமானவர்கள், அல்லது தொலைதூர நாடுகளிலிருந்து வந்து, அறிமுகமில்லாத பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கருத்துக்களைக் கொண்டு வருபவர்கள் உட்பட மற்றவர்கள் மீது நமது நம்பிக்கையைப் புதுப்பிக்க விரும்புகிறேன்! ஏனென்றால் நாம் அனைவருரும் கடவுளின் குழந்தைகள்.
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் உள்ள கிறிஸ்தவர்களின் துன்பங்களுக்கும், அனைத்து இஸ்ரேலிய மக்களுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் எனது நெருக்கத்தை வெளிப்படுத்துகிறேன்.
உலகம் முழுவதும் யூத-விரோத சூழல் வளர்ந்து வருவது கவலையளிக்கிறது. ஆனால் அதே நேரத்தில், காசா மக்களையும், குறிப்பாக அதன் கிறிஸ்தவ சமூகத்தையும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.