இறந்து போன தாயின் தொலைந்து போன மொபைல் வேணும்… இதயத்தை நொறுக்கிய சிறுமியின் பின்னணி!!
கொரோனாவால் உயிரிழந்த தனது தாயின் மொபைல் போன், கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது திருடுபோய்விட்டதாகவும், அதில் தனது தாயின் புகைப்படங்கள் என ஏராளமான நினைவுகள் அடங்கியிருப்பதால் தயவு செய்து மொபைலை கண்டுபிடித்து தருமாறு கோரி காவல்நிலையத்தில் 9 வயது சிறுமி ஒருவர் புகார் மனு அளித்திருப்பது நெஞ்சை கரைய வைப்பதாக அமைந்துள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தின் குஷால்நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் ஹிரிதிக்ஷா, 4ம் வகுப்பு படித்து வரும் இச்சிறுமி தனது தாயை கொரோனா வைரஸுக்கு கடந்த மே 16ம் தான் பறிகொடுத்திருக்கிறார்.
தாயை பறிகொடுத்துவிட்டு அவருடைய நினைவுகளையும் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் சிறுமியின் பாசப்போராட்டம் குறித்து சிறுமியின் உறவினரான அக்ஷிதா கூறுகையில், “கடந்த மே 15ம் தேதி சிறுமி ஹிரிதிக்ஷாவின் தாய் பிரபாவின் மொபைல்போனுக்கு தொடர்பு கொண்டோம். ஆனால் அவரது மொபைல் ஸ்விட்ச் ஆப் என வந்தது. ஆனால் அடுத்த நாளான மே 16ம் தேதி சிறுமியின் தாயார் பிரபா மரணமடைந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
அந்த அதிர்ச்சிக்கு மத்தியிலும் சிறுமியின் தாயாருடைய மொபைல் போனை மடிகேரியில் உள்ள மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டோம்.
ஆனால் அது தொலைந்து போனதாக எங்களுக்கு சொல்லப்பட்டது. சிறுமி ஹிரிதிக்ஷா தனது தாயாருடைய ஏராளமான புகைப்படங்கள் அந்த போனில் இருப்பதாக கூறி அந்த மொபைலை கேட்டு தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார்.
அவரை சமாதானப்படுத்த இயலவில்லை என்பதால் காவல்நிலையத்திற்கு கூட்டிச் சென்று தொலைந்து போன மொபைல் போனை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்திருக்கிறோம்.” என்றார்.
சிறுமிடம் இருந்து வந்த இந்த உணர்ச்சிகரமான புகார் குறித்து குடகு மாவட்ட எஸ்பி ஷாமா மிஸ்ரா கூறுகையில், தொலைந்து போன சிறுமியின் தாயினுடைய மொபைல் போனை கண்டுபிடித்துக் கொடுக்க முன்னுரிமையுடன் செயல்பட்டு வருகிறோம்.
மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். விரைவில் போனை மீட்டு சிறுமியிடம் வழங்குவோம் என தெரிவித்தார்.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் சிறுமியின் புகார் குறித்து தகவல் வெளியான நிலையில் ஏராளமான இணையவாசிகள், தொலைந்து போன சிறுமியின் தாயினுடைய மொபைலை கண்டுபிடித்து கொடுத்து சிறுமிக்கு உதவுமாறு காவல்துறையினரை வலியுறுத்தி வருகின்றனர்.