தடுப்பூசிகளுடன் இலங்கை வர தயார் நிலையில் ஏர் இந்திய விமானம் : வெளிவந்த தகவல்
இலங்கைக்கு இந்திய அரசு நன்கொடையாக வழங்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்ழகத்தின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை ஏற்றிய விமானம் நாளை (28) காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேரும் என்று ஏர் இந்தியாவின் கட்டுநாயக்க விமான நிலைய உதவி மேலாளர் சரநாத் பீரிஸ் தெரிவித்தார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு இன்று இதை தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஏர் இந்தியா விமானமான ஏஐ -281 புதுடில்லியில் இருந்து புறப்பட்டு மும்பை விமான நிலையத்திற்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த விமானம் நாளை (28) காலை 11.00 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேரும்.
இந்த சரக்கு சுமார் 1,323 கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கும்.
இந்த விமானம் தடுப்பூசிகளை சேமிப்பதற்காக குளிரூட்டப்பட்டு, இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் குறித்த விமானத்தில் பயணிகளும் வருவார்கள் என ஏர் இந்தியாவின் கட்டுநாயக்க விமான நிலைய உதவி மேலாளர் சரநாத் பீரிஸ் கூறியுள்ளார்.
இந்தியாவினால் இலங்கைக்கு 600,000 கொவிட் – 19 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தடுப்பூசி கிடைக்கப்பெற்ற மறுநாள் முதல் அதனை மக்களுக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய ஜனாதிபதி,
முதல் கட்டமாக வைத்தியர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், தாதியர்களுக்கும் வழங்கப்படும் எனவும், அதன் பின்னர் இராணுவம், பொலிஸாருக்கும், வயோதிபர்களுக்கும் செலுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.