LatestNews

நீண்ட நாட்களுக்கு பின் நாடளாவிய ரீதியில் இன்று மீள ஆரம்பமானது 3,800 பாடசாலைகள்!!

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி இன்று முதல் பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardana) தெரிவித்தா் .

நீண்ட காலங்களுக்குப் பின் இலட்சக்கணக்கான மாணவர்கள் பெரும் ஆவலுடன் இன்றைய தினம் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பரெனவும் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலத்துக்குப் பின் தமது பிள்ளைகளின் மகிழ்ச்சியான முகத்தை நேரடியாக காண்பதற்காக அனைத்து ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பார்களென தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கல்வி என்பது பிள்ளைகளின் எதிர்காலமென்பதுடன் அது பிள்ளைகளின் வளர்ச்சிக்கான பலம் என்றும் குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சர்,

அந்த கல்வியை பெற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரச அதிபர் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் தலையீடு செய்து நம்பிக்கைக்குரிய தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளனரென்றும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பருத்தித்துறை முதல் தெய்வேந்திரமுனை வரை, மேல் மாகாணம் தொட்டு கிழக்குமாகாணம் வரை பரந்து வாழும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமுகமளிப்பதை எவராலும் தடுக்க முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த நாட்டின் பிள்ளைகள் சுதந்திரமாக தமது கல்வியை பெற்றுக் கொள்வதற்கான உரிமையை பாதுகாப்பது எம் அனைவரதும் பொறுப்பென்றும் அந்த விடயத்தில் நாம் அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டுமென்றும் கல்விமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

நாடு முழுவதுமுள்ள 200 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கையுள்ள 3,800 பாடசாலைகள் இன்றைய தினம் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளன.

அத்துடன் நான்கு கட்டங்களாக ஏனைய வகுப்புகள் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளன.

எனினும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தமது சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கக் கோரி கடந்த 100 நாட்களுக்கு மேல் கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகி பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டிருந்தனர்.

அதனால் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்லைன் மூலமான கற்பித்தல் நடவடிக்கையும் தடைப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையிலேயே இன்றைய தினம் பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிப்பதற்கு தீர்மானித்ததாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை கல்வி, மாணவர்களின் எதிர்காலம், பெற்றோர்களின் மகிழ்ச்சி மட்டுமன்றி முழு நாட்டினதும் மகிழ்ச்சியாகுமென்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *